ஜனநாயக பண்பாட்டு நன்முறையை பாதுகாக்க வேண்டும்- கே.எம். காதர் மொகிதீன்

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் ஜனநாயக பண்பாட்டு நன்முறையை பாதுகாக்க அனைவரும் பாடுபடவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
தங்கத் தமிழகத்தில் பொங்குபுகழ் பெற்றுவரும் மக்கள் முதல்வராகத் திகழ்பவர் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் ஆவார். தமிழ்ப்பண்பாடும், ஜனநாயக மரபும், அரசியல் நாகரிகமும் தமிழர்களுக்குக் கற்பித்திருக்கும் பாடமும் படிப்பினையும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதாகும்.


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் மக்கள் முதல்வரும் நாடும் ஏடும் போற்றிவரும் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் மீது அநாகரிக வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி, மக்கள் மனம் நோகச் செய்யும் பண்பாடற்ற முறையில் திமுக இளைஞரணி செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.


“”””ஒழுக்கம் உடையார்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொல்”” என்பது ஐயன் திருவள்ளுவர் போதித்த பொன்மொழியாகும். வள்ளுவர் வழியில் நின்று நாடாண்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் உதயநிதி, உதிர்த்திருக்கும் தரமற்ற சொல் பிரயோகம் கலைஞர் அவர்களின் பெயரையும், புகழையும் கெடுக்கும் வகையில் வெளிவந்திருக்கிறது. இது மிகுந்த வேதனையும் வருத்தமும் தருகிறது. ஜனநாயக முறையில் எதிர்க்கட்சியின் தலைவராகத் திகழ்பவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆளும் கட்சிக்கு அறிவுரைகளைச் சுட்டிக்காட்டுவதும், சில நேரங்களில் குத்திக் காட்டுவதும் ஜனநாயக வழிமுறையாகும். தமிழகத்திற்கு அரசியல் வழிகாட்டிய முன்னோர்கள் அந்த நன்முறையைத் தொடர்ந்து பின்பற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். அத்தகைய நன்முறையே நாட்டு மக்கள் விரும்பி ஏற்கும் உயர்ந்த பண்பாட்டு முறையாகும்.


தமிழகத்தில் இதுகாறும் நடைமுறையில் இருந்துவரும் இந்த ஜனநாயக பண்பாட்டு நன்முறை என்றும் தொடர்ந்து நீடித்து நிலைத்த தமிழகத்திற்குப் பேரும் புகழும் சேர்க்க அனைவரும் பாடுபடவேண்டும் என்பதே எங்களின் பணிவான அன்பான வேண்டுகோள் ஆகும். தமிழக மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் மனம் புண்படும்படி உதயநிதி ஸ்டாலின் உதிர்த்த வார்த்தைகளைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கவில்லை என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்குத் தமிழ் மக்கள் தெரிவிக்கிறார்கள்.


இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *