சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், தலைவாசல் விஜய், சஞ்சனா, வாமிகா கபி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘DC’
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
கதை, சட்டவிரோதமாக காவல்துறையின் ஆயுதங்களை கடத்தும் ஒரு குழுவைச் சுற்றி நகர்கிறது. அந்தக் குழுவில் முக்கியமானவராக லோகேஷ் கனகராஜ் நடித்திருக்கிறார். இந்த ஆயுதக் கடத்தலை வழிநடத்தும் மர்ம நபராக தலைவாசல் விஜய் வருகிறார். அவர்களை பிடிக்க காவல்துறை தீவிர வேட்டையில் இறங்குகிறது.
அதே நேரத்தில், ஒரு அப்பாவி குடும்பஸ்தனின் பணத்தை பறித்த போலீஸ் அதிகாரி அவரைக் கொலை செய்து விடுகிறார். அந்த அநீதியை நேரில் அறியும் லோகேஷ், நீதியை தன் கையில் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்தையே தாக்கும் அளவுக்கு வெடிக்கிறார். இதன் பின்னர் அவர் போலீஸின் முதன்மை இலக்காக மாறுகிறார்.
இந்த பரபரப்புக்கு நடுவில் சஞ்சனாவை சந்திக்கும் லோகேஷ், அவளை காதலிக்கத் தொடங்குகிறார். ஆனால் எதிர்பாராத சம்பவத்தில் சஞ்சனா உயிரிழக்க, அதற்குக் காரணம் தான்தான் என்ற குற்ற உணர்வில் தவிக்கிறார். பின்னர் கதைக்குள் நுழையும் வாமிகா கபியின் கதாபாத்திரம், லோகேஷின் வாழ்க்கையுடன் எப்படி இணைகிறது என்பதே இரண்டாம் பாதியின் முக்கிய சஸ்பென்ஸ். இறுதியில் லோகேஷின் பயணத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? அவர் போலீஸின் பிடியில் சிக்குகிறாரா? இல்லையா? என்பதே கதை…
நடிகராக அறிமுகமாகியிருக்கும் லோகேஷ் கனகராஜ், முதல் படமென்பதே தெரியாத அளவுக்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்ஷன், உணர்வு, கோபம், காதல் என ஒவ்வொரு பரிமாணத்திலும் தன்னம்பிக்கையுடன் திரையை நிரப்புகிறார். ஒரு அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல தனது கதாபாத்திரத்தை முழுமையாக சுமந்திருக்கிறார்.
வாமிகா கபி, தனது அழகாலும், திரையில் தோன்றும் ஒவ்வொரு தருணத்திலும் ஈர்க்கும் நடிப்பாலும் ரசிகர்களின் கவனத்தை கவர்கிறார். குறுகிய நேரம் வந்தாலும் சஞ்சனா தனது மென்மையான நடிப்பால் கதையின் உணர்ச்சி மையமாக மாறுகிறார். தலைவாசல் விஜய், கிரிஷ் தயாள், கஸ்தூரி ராஜா, அவினாஷ் ரகுதேவன், ஜவஹர் சக்தி, ஷரத் ரவி, பிரணவ் தியோஃபைன், ஏ. ராஜரிஷி, பாலாஜி தேவிபிரசாத், அட்டுல் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
முகேஷ் ஜியின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளுக்கு தனித்துவமான அழகை கொடுத்துள்ளது. குறிப்பாக இயற்கை பின்னணியில் அமைந்த காட்சிகளும், ஆற்றுக்குள் லோகேஷ் மற்றும் வாமிகா இடம்பெறும் காட்சிகளும் கண்களை கவர்கின்றன.
மொத்தத்தில் இந்த DC கவர்ச்சி கலந்த திரில்லர்.