பெரிய திருப்பங்களை நம்பாமல் காதல், உறவு மற்றும் உணர்வுகளை மையமாக வைத்து எளிமையான காதல் கதையை நகைச்சுவையும் உணர்வுகளும் கலந்து படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் விஷ்ணு எடவன். ராஜேஷ் சுக்லாவின் அழகான ஒளிப்பதிவு, ஜென் மார்ட்டினின் இனிமையான இசை, படத்தை ரசிக்க வைக்கின்றன.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண் பார்க்கத் தொடங்குகின்றனர். காதல் திருமணத்தில் உறுதியாக இருக்கும் கவின், வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
மறுபுறம், திருமண வாழ்க்கைக்குள் சிக்காமல் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என நினைக்கும் நயன்தாராவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்க, அவரும் வீட்டை விட்டு சென்னைக்கு வருகிறார். அங்கு சந்திக்கும் இருவரும் நண்பர்களாகப் பழக, கவினுக்கு நயன்தாரா மீது காதல் மலர்கிறது. காதல் மற்றும் திருமணத்தில் நம்பிக்கை இல்லாத நயன்தாராவிடம் கவின் தன் காதலை சொல்லாமல் ஒருதலையாக காதலிக்கிறார்.
எதிர்பாராத சூழலில் இருவரும் கணவன்-மனைவியாக நடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நயன்தாராவின் மனதை மாற்ற கவின் முயற்சிக்கிறார். இறுதியில் கவின் காதல் வென்றதா? கணவன் மனைவியாக நடிக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை….
கொங்கு இளைஞராக நடித்திருக்கும் கவின், காதல் ஏக்கம், ஏமாற்றம் என பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்துகிறார். நகைச்சுவைக் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். குறிப்பாக சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி கூட்டணி பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறது. நயன்தாரா வழக்கமான ஸ்டைலான தோற்றத்துடன் திரையை ஆக்கிரமிப்பதோடு, அனுபவமான நடிப்பாலும் கவனம் ஈர்க்கிறார். இருப்பினும், கவினுக்கும் அவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் சில காட்சிகளில் தெரிகிறது. ராதிகா, கே.பாக்யராஜ், பிரபு உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்களின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
மொத்தத்தில் இந்த ‘ஹாய்’ காதல் கொடுமை.
RATING 3/5