மண்டாடி விமர்சனம்

சென்னையில் உள்ள ஒரு தீம் பார்க்கில் வேலை பார்த்து வருகிறார் சூரி. தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்துக்கு சில காரணங்களால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பி வருகிறார். அங்கு பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் மீண்டும் அவரது வாழ்க்கைக்குள் வந்து நிற்கின்றன. ஊரில் நடைபெறும் படகு போட்டியை மையமாக வைத்து இரு தரப்பினருக்கு இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. அந்த சூழலில் சாட்டைபுலி என்ற கதாபாத்திரத்தில் வரும் சுஹாஸின் மகனான மாரியை, மற்றொரு தரப்பை சேர்ந்த மாரி கொலை செய்ய முயற்சி செய்கிறார். இதனால் கோபமடையும் சாட்டைபுலி, மாரியை கொல்ல முடிவு செய்கிறார்.

இந்த சூழ்நிலையில் மாரி, சூரியிடம் தஞ்சம் அடையச் செல்ல வேண்டும் என முடிவு செய்யப்படுகிறது. மாரி தன்னுடைய முன்னாள் காதலியின் மகன் என்பதை தெரிந்து கொள்ளும் சூரி, பல வருடங்களுக்கு பிறகு தனது சொந்த ஊருக்கு திரும்புகிறார். ஆனால், அவர் வருவது வெறுமனே ஒருவரை காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல. மாரியின் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காக ஊர் பஞ்சாயத்தில் நின்று பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்கிறார். அப்போது சாட்டைபுலி ஒரு சவாலை முன்வைக்கிறார். இரு வகையறாக்களும் படகு போட்டியில் மோத வேண்டும்; அந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களே இனி ஊரில் இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். தோல்வியடையும் தரப்பு இனி போட்டியில் இறங்கக்கூடாது என்ற முடிவும் எடுக்கப்படுகிறது.

இதன் பிறகு மாரியை படகு போட்டிக்காக சூரி தயார்படுத்துகிறார். அவருக்கு பயிற்சி அளித்து போட்டியில் வெற்றி பெற வைக்க சூரி எடுக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் செல்ல, மறுபக்கம் சாட்டைபுலிக்கும் சூரிக்கும் இடையிலான பழைய பகை என்ன என்ற கேள்வி படம் முழுவதும் ரசிகர்களை தொடர்ந்து பயணிக்க வைக்கிறது. இந்த இருவருக்கும் இடையே என்ன நடந்தது? ஏன் ஒருவர் மீது ஒருவர் இவ்வளவு கோபத்துடன் இருக்கிறார்கள்? சூரி இறுதியில் சாட்டைபுலியை வென்றாரா? என்பதே மீதிக்கதை…..https://tamillive.news/

தமிழ் சினிமாவில் மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும், அவற்றின் வழக்கமான கதைக்களத்தை பின்பற்றாமல், மீனவ சமூகத்தின் மற்றொரு பக்கத்தை திரையில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி. கடல், படகு, போட்டி, கிராமம், மனித உறவுகள் என ஒவ்வொரு அம்சத்தையும் கதையின் ஒரு பகுதியாகவே மாற்றியிருப்பது படத்தின் முக்கியமான சிறப்பு. குறிப்பாக கடலும் கரையும் வெறும் காட்சிப் பின்னணியாக இல்லாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு பயணிக்கும்படி கையாளப்பட்டிருக்கிறது.

சூரிக்கு அடுத்தபடியாக படத்தில் அதிகம் கவனம் பெறுவது சாட்டைபுலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுஹாஸ். தெலுங்கு சினிமாவில் இருந்து வந்த நடிகராக இருந்தாலும், இந்த படத்தில் அவரது நடிப்பு எந்த இடத்திலும் அந்நியமாக தெரியவில்லை.

குறிப்பாக தமிழ் வசனங்களுக்கான அவரது லிப் சிங்க் மிகவும் கச்சிதமாக அமைந்துள்ளது. குரலும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதால், படத்தை பார்க்கும்போது இது டப்பிங் செய்யப்பட்ட நடிப்பு என்ற உணர்வே பல இடங்களில் வரவில்லை. அந்த கதாபாத்திரத்தின் கோபம், வன்மம், ஆளுமை என அனைத்தையும் சுஹாஸ் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். சூரி – சுஹாஸ் இருவரும் நேருக்கு நேர் நிற்கும் காட்சிகள் படத்தின் முக்கியமான பலமாக அமைந்துள்ளன.

படத்தின் கிளைமேக்ஸ் கிட்டத்தட்ட அரை மணி நேரம் படகு போட்டியை மையமாக வைத்து நகர்கிறது. இதுதான் ‘மண்டாடி’யின் மிகப்பெரிய பலம். ஒவ்வொரு போட்டி கட்டத்திலும் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ரசிகர்களை சீட் எட்ஜில் உட்கார வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். போட்டியின் முடிவு என்னவாகும் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் கடைசி வரை தொடர்கிறது. ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் கிளைமேக்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதற்கு ‘மண்டாடி’யின் இறுதிப்பகுதி சிறந்த உதாரணம். குறிப்பாக படகு போட்டிகளை விரும்புபவர்களுக்கு இது நிச்சயம் திரை விருந்தாக இருக்கும்.

மொத்தத்தில் இந்த ‘மண்டாடி’ மீனவ வீரன்….

RATING 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *