பல ஆண்டுகளாக உலகின் கண்களில் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்து வரும் ஒரு முக்கிய உளவாளியை இந்திய உளவுத்துறையான ‘ரா’ தேடி வருகிறது. அந்த உளவாளியை தானே முதலில் கண்டுபிடித்து மேலதிகாரிகளிடம் ஒப்படைத்து தனது திறமையை நிரூபிக்க கார்த்தி முயற்சி செய்கிறார். ஆனால், அவர் அந்த முயற்சியில் வெற்றி பெறுவதற்கு முன்பே சர்வதேச கூலிப்படையினர் உளவாளியை கொலை செய்கிறார்கள். அவரிடம் இருக்கும் மிக முக்கியமான ரகசியத்தையும் கைப்பற்ற அவர்கள் முயற்சிக்கிறார்கள். அந்த நேரத்தில் கார்த்தி அந்த ரகசியத்தை தெரிந்து கொள்வதோடு, இதுவரை இறந்துவிட்டதாக நினைத்த தனது தந்தை உயிருடன் இருப்பதையும் அறிகிறார்.
தந்தையைத் தேடும் பயணத்தில் கார்த்திக்கு பல புதிய தகவல்கள் கிடைக்கின்றன. இறந்த உளவாளி கொடுத்த ரகசிய சாவி மட்டும் போதுமானதல்ல என்றும், மேலும் இரண்டு உளவாளிகளிடம் அதனுடன் தொடர்புடைய இரு முக்கிய ரகசியங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது. இந்த மூன்று ரகசியங்களையும் கைப்பற்றி, அவற்றின் மூலம் இந்தியாவுக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் திட்டத்தில் சர்வதேச கூலிப்படைத் தலைவன் பிளாக் டேக்கர் இறங்குகிறார். இந்த வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.
ஒருபுறம் கூலிப்படையினர் ரகசியங்களை கைப்பற்ற முயற்சிக்க, மறுபுறம் நாட்டை பாதுகாக்கும் நோக்கில் கார்த்தி அந்த ரகசியங்களின் பின்னணியை கண்டுபிடிக்கிறார். அந்த தேடலின் போது பல வருடங்களுக்குப் பிறகு தனது தந்தையையும் மீண்டும் சந்திக்கிறார். அதன் பிறகு தந்தையும் மகனும் ஒன்றாக இணைந்து எதிரியின் சதித்திட்டத்தை முறியடிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள்தான் படத்தின் பிரதான கதைக்களமாக மாறுகிறது. நாட்டை அழிக்க முயற்சிக்கும் அந்த திட்டம் என்ன, அதன் பின்னால் இருப்பது யார், அதை தந்தை மகன் கூட்டணி எப்படி முறியடிக்கிறது? என்பதே கதை….
அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் கார்த்தி, உருவத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காண்பித்திருக்கிறார். வெள்ளந்தியான நபர், ஆனால் வேலைன்னு வந்துட்டா உயிரை துச்சமாக நினைத்து மக்களை காக்கும் பணியை திறம்பட செய்யும் சூப்பர் உளவாளி என்பதை நிரூபிக்கும் வகையில் சாகசம் நிறைந்த காட்சிகளை நம்பும்படி கையாண்டிருக்கிறார். காதல் காட்சிகள் குறைவு என்றாலும் ஆக்ஷன் காட்சிகளிலும், விமான சாகசங்களிலும் கார்த்தியின் உற்சாகமான நடிப்பு ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவியின் புதிய காமெடி கூட்டணியின் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அதிலும், வில்லன் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் கதையை கேட்டு கொடுக்கும் இவர்களது ரியாக்ஷன் திரையரங்கையே சிரிப்பு சத்தத்தால் அதிர வைக்கும்.
சர்வதேச கூலிப்படை தலைவன் பிளாக் டேக்கர் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, வழக்கமான நடிப்பாக இருந்தாலும், திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார். வில்லனாக இருந்தாலும் மக்கள் செய்யும் தவறுகள், அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளை விவரிக்கும் நீளமான காட்சியை தனது திரை இருப்பு மற்றும் நடிப்பு மூலம் தொய்வில்லாமல் கடத்தியிருக்கிறார். சிறிய வேடம் என்றாலும் ஆக்ஷனில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார் மாளவிகா மோகனன், படம் முழுவதும் பயணித்தாலும் ஆஷிகா ரங்கநாத்தின் வேடம் மனதில் நிற்கவில்லை. ஒரு காட்சியில் தலைகாட்டி மறைகிறார் ரஜிஷா விஜயன்.
மொத்தத்தில் இந்த ’சர்தார் 2’ ஒரு முறை சாத்தியக்காரன்…
RATING 3/5