விலை உயர்வதால் பொதுமக்கள் பாதிப்பு- TTV கண்டனம்

அத்தியாவசியப் பொருட்களுடன் அரிசி விலையும் உயர்வதால் பொதுமக்கள் பாதிப்பு – தொடர்ந்து அதிகரித்து வரும் விலை வாசி உயர்வை ஐந்து மாதங்களாக கண்மூடி வேடிக்கை பார்க்கும் தவெக அரசின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத பொருட்களில் ஒன்றான அரிசியின் சந்தை விலை, தவெக ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில் மூன்றாவது முறையாக அதிகரித்துள்ளதாக வரும் செய்திகள் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களோடு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில், தற்போது அரிசியின் விலையும் தொடர்ந்து 60% க்கு மேல் அதிகரித்திருப்பது ஏழை, எளிய சாமானிய மக்களின் மீது கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரை உரிய நேரத்தில் பெற்றுத் தராத தவெக அரசால், காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் சாகுபடிப் பரப்பளவு குறைந்ததோடு, குறுவை சாகுபடியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதோடு, மக்களின் அடிப்படைத் தேவையான அரிசியின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளதால், ஒரு வேளை உணவிற்கே ஏழை, எளிய மக்கள் சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியை பயன்படுத்தலாம் என்றால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் சட்டசபையில் சொன்னதைப் போலவே நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசி ஆடு, மாடுகளுக்கு வழங்கும் நிலையில் தரமற்றதாக இருப்பதால் அதனையும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதேநேரத்தில், வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்கப்படும் எனப் பெரியளவில் அறிவித்திருந்தாலும், பெரும்பாலான நியாய விலைக் கடைகளுக்கு போதுமான அளவு வெங்காயம் வழங்கப்படாத காரணத்தால், ஏமாற்றத்துடன் திரும்பும் நிலையே நீடிக்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தவெக ஆட்சி பொறுப்பேற்ற இந்த ஐந்து மாதங்களில் மட்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு, பால் தட்டுப்பாடு, மறைமுக மின் கட்டண உயர்வு, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு என மக்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்புடைய அனைத்து அத்தியாவசிய விவகாரங்களிலும் தவெக அரசு மெத்தனமான மற்றும் அலட்சியமான போக்குடன் செயல்படுவதால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கிப் போயுள்ளது.

எனவே, விளிம்புநிலை குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை நேரடியாக ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதோடு, பொதுமக்கள் அனைவருக்கும் நியாயமான விலையில் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தவெக அரசையும், முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *