அரியலூர் மாவட்டம், செந்துறையில் அக்டோபர் 2, 2026 சுப்ரமணியன் என்பவர் வீட்டில் உள்ள செப்டிக் டேங்கிற்குள் தினகரன் (60), பாஸ்கர் (45) ராமச்சந்திரன் (48) ஆகிய மூன்று தொழிலாளர்கள் இறக்கப்பட்டு நச்சு வாயுக்கள், மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
செப்டிக் டேங்கிற்குள் முதலில் இறங்கிய தினகரன் நச்சு வாயுக்கள்/ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மூச்சுத்திணறி மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்பதற்காக பாஸ்கர் செப்டிக் டேங்கிற்குள் இறங்கியபோது அவரும் மயங்கி விழுந்துள்ளார். அவர்களை மீட்பதற்காக ராமச்சந்திரன் உள்ளே இறங்கியபோது அவரும் மயங்கி விழுந்துள்ளார். இதன் விளைவாக மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மூன்று தொழிலாளர்களும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி செப்டிக் டேங்கிற்குள் இறக்கப்பட்டதன் காரணமாக மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் கட்சி மாவட்டச் செயலாளர் இளங்கோ, திருச்சி மாநகர் செயலாளர் கோவி.வெற்றிச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின் உள்ளிட்ட தோழர்கள் உறவினர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையும் மனிதக் கழிவை மனிதர் அள்ளுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் கீழ் வழக்கினை பதிவு செய்து வீட்டு உரிமையாளரை கைது செய்திருக்கிறது.
ஆனால் மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை மனிதக் கழிவை மனிதர் அகற்றுதல் தடை மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் கீழான நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்படாததால் நான்காவது நாளாக இறந்த உடல்களை பெற மறுத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
மாவட்ட நிர்வாகத்தின் தாமதம், அணுகுமுறை ஏற்கத்தக்கது அல்ல. பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படியான நிவாரணம் வழங்காமல் இருப்பது, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டல்கள், மேற்கண்ட சட்டத்திற்கும் முற்றிலும் முரணானதாகும். அநியாயமாக பறிக்கப்பட்டுள்ள மூன்று உயிர்களுக்கும் இழைக்கப்படுகிற அநீதியாகும்.
உடனடியாக தமிழக அரசு தலையிட்டு மாவட்ட நிர்வாகத்தை அறிவுறுத்தி சட்டப்படியான நிவாரணத்தை வழங்கிடச் செய்யுமாறு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது என்று மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு பொதுச்செயலாளர் பா.சுகந்தி ஆகியோர் தெரிவித்தனர்.