ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவார பகுதியில் உள்ள தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸார், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்து வாரிசுதாரர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழநி அருகே புதூரைச் சேர்ந்த சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர்நீ திமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்று திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோரை கடந்த ஜூலை 29-ம் தேதி போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த சிபிசிஐடி போலீஸார், திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று நீதிபதி பாக்கியராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிசிஐடி போலீஸாரின் கோரிக்கையை ஏற்று, ஆக.5-ம் தேதி முதல் ஆக.7-ம் தேதி வரை (வெள்ளிக்கிழமை மதியம் வரை) மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, மதுரை மத்திய சிறையில் இருந்து திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நால்வரையும் சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *