புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ளது ‘மெய்வழிச்சாலை’ கிராமம்.
அனைத்து மத மற்றும் சாதியினரும் ஒற்றுமையாக விளங்க வேண்டும். இறந்த பிறகு அவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப எமதர்மன் நரகம் மற்றும் சொர்க்கத்திற்கு அனுப்புவார் என்பது அந்த மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அனைவரும் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக தான் மெய்வழிச்சாலை என்பது தொடங்கப்பட்டது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதற்கு இணங்கவும் மெய்வழிச்சாலை கிராமத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என மதத்தை பிரிக்காமலும் 69 சாதியினரும் சாதி,மத பேதமின்றி வசித்து வருகின்றனர்.
“1940-ம் ஆண்டில் மதுரையிலிருந்து வந்த காதர்பாட்சா என்ற இயற்பெயர் கொண்ட மெய்வழி சாலை ஆண்டவர்கள் புதுக்கோட்டை சமஸ்தான மன்னரிடமிருந்து 99- ஏக்கர் நிலத்தை வாங்கி, இந்தக் கிராமத்தை உருவாக்கினார். அவர் மக்கள் எமன் கை வசம் சிக்காமல் நித்திய வாழ்வை பெறுவதற்காக ‘மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம்’ என்ற ஒரு புதிய மதத்தையும் தோற்றுவித்தார்.
இம்மதத்தின் விதிமுறைகளின்படி, ஆண்கள் மதத்தின் வேதங்களைப் பயில வேண்டும். காவி வேட்டியை தார்ப்பாய்ச்சிக் கட்ட வேண்டும். தலையில் முண்டாசு அணிய வேண்டும், அதில் பிறை குத்திக் கொள்ள வேண்டும். பெண்கள் வழிபாடு நேரத்தில் மட்டும் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும். ஆண்கள் அனந்தர்கள் என்றும் பெண்கள் அனந்தகிகள் என்று அழைக்கப்படுவார்கள். இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மூன்று மதங்ககளில் இருந்து வந்த 69 ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த ‘மெய்வழிச்சாலை’ மதத்திலும் இந்தக் கிராமத்திலும் இருக்கிறார்கள். மெய்வழிச்சாலை கிராமத்தில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது, ஜாதிப் பிரிவுகள் கிடையாது, உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது.
கூலித் தொழிலாளிகளும், செல்வந்தர்களும், எந்த ஒரு ஏற்றத்தாழ்வின்றி, எந்த ஒரு பாகுபாடின்றி, அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்கிறார்கள். இரு நபர்கள் சந்தித்துக் கொள்ளும்போது இரு கைகளையும் காதுவரையில் உயர்த்தி நமஸ்காரம் என்று மரியாதையை செலுத்துகிறார்கள். மனித இனத்துக்கு மெய்வழிச்சாலை ஒரு எடுத்துக்காட்டான கிராமம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
மெய்வழிச்சாலை கிராமத்தின் எல்லைக்குள்ளே யாரும் ஓடுகளை பயன்படுத்தி வீடுகளை கட்டுவதில்லை. எந்த வீட்டினுள்ளேயும் கழிவறைகள் இல்லை, கழிவறை என்பது ஊர் எல்லைக்கு ஓரத்தில் தனியாக அமைக்கப்பட்டிருக்கிறது.
எந்த ஒரு வீட்டிலும் மின்சாரம் கிடையாது, தொலைக்காட்சி பெட்டி, வானொலி பெட்டி போன்ற எந்த பொழுதுபோக்கு விசயங்களும் இல்லை. புதுமையை விரும்பக்கூடிய சில மனிதர்கள் மட்டும் மெய்வழிச்சாலை கிராமத்தை சுற்றி வீடுகளை கட்டிக்கொண்டு குடியிருக்கிறார்கள்.
கிராமத்தின் நடுவில் ஒரு வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது அதை பொன்னரங்க தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது. அந்த தேவாலயத்தின் அருகில் தான் மறலி கை தீண்டா மெய் மதத்தை உருவாக்கிய மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் அடங்கியுள்ளார்கள் (வான்கன்னி விராட்தவத்தில் இருக்கிறார்கள்). அங்கும் எந்த ஒரு ஆரவாரங்களும் அனாச்சாரங்களும் இல்லாமல் அமைதியான வழிப்பாடுகள் நடக்கின்றன. மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்கள் திருமேனி தாங்கி வாழ்ந்த பொழுது நடத்திய சத்சங்கங்களையும் சொற்பொழிவுகளையும் கிரந்தங்களாக தொகுத்து, அந்த கிராம மக்கள் தினமும் ஓதிவருகிறார்கள்.
இங்குள்ள சத்யதேவ பிரம்ம குலத்தினர் ஆலயத்திலுள்ள பொன்னரங்க தேவாலயத்தில் திருக்கார்த்திகை மற்றும், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒன்றுகூடி சமத்துவ பொங்கலாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு ஒன்று கூடி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மெய்வழிசாலையில் வசித்து வரும் 69 சமூகத்தினரும், இனப்பாகுபாடின்றி பொங்கல் திருநாளை கொண்டாடுகின்றனர்.
மனிதர்கள் படிப்பதற்காகவோ, பெயர், புகழ் மற்றும் செல்வங்களை சேர்ப்பதற்காகவோ இந்த பூமிக்கு வரவில்லை, மாறாக என்றும் அழியா நித்திய வாழ்வை பெற்று இறைவனடி சேர வந்திருக்கிறோம் அதனால் வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இந்த வாழ்க்கையை சிறப்பாக வாழ வேண்டும் என்று நம் முன்னோர்கள் பலர் கூறியுள்ளனர்.
சரி, படிப்பது, தொழில் புரிவது, சம்பாதிப்பது, இதையெல்லாம் தாண்டி வாழ்வது என்றால் என்ன என்பதை இந்த மெய்வழி சாலைக்கு சென்றால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.
உலக மாயையில் சிக்கி தவிக்காமல் முடிவில்லா நித்திய வாழ்க்கையை பெறுவதற்கான வழியை விளக்கும் வாழ்வை சாலை மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.