ஓட விடும் வெறி நாய்! ஓட்டம் பிடிக்கும் மக்கள்!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிப் பகுதிகளான மேலக் கடையநல்லூர், கிருஷ்ணாபுரம் மற்றும் ரஹ்மானியாபுரம் ஆகிய இடங்களில் சாலையில் நடந்து சென்றவர்கள், விவசாய வேலைக்குச் சென்றவர்கள் மற்றும் திருமண நிகழ்வுகளில் பங்கேற்கச் சென்றவர்களை வெறிநாய் ஒன்று கொடூரமாகத் துரத்தித் துரத்திக் கடித்ததில், ஒரே நாளில் 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. 13 வயது சிறுமி முதல் 65 வயது முதியவர் வரை 12 பேரை அந்த வெறிநாய் ஒரே நாளில் கடித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்தவர்கள் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். லேசான காயமடைந்த 5 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், தீவிர காயமடைந்த பிரகதீஷ் என்பவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தெருக்களில் அபாயகரமான முறையில் சுற்றித்திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த வெறிநாயை நகராட்சி ஊழியர்கள் பிடித்து அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.ஒரே பகுதியைச் சேர்ந்த 12-க்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து வெறிநாய் கடித்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *