இயக்கம்: ஆர். ராகவ் மிர்தாத்
நடிப்பு: சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், டிராவிட் செல்வம், தேவதர்ஷினி, ஆர்.ஜே. தீபக், சினிமாவாலா சதீஷ்.
கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர் கிஷ், தனது நண்பர்களான ரஷ் மற்றும் துஷ் ஆகியோருடன் ஒரு விஞ்ஞானியின் வீட்டில் தங்குகிறார். அங்கு இருக்கும் ட்ரோன் மூலம் எதிரே உள்ள மர்மமான வீட்டை கவனிக்கத் தொடங்கும்போது, அந்த வீட்டில் வசிக்கும் பிரக்ருதியை சந்திக்கிறார். அதன்பிறகு ஒரு விஞ்ஞானி, ஒரு விசித்திரமான இளம்பெண், காதலைத் தேடும் காவல்துறை அதிகாரி, ஆண்களை பொம்மைகளாக மாற்றும் சூனியக்காரி என பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஒன்றோடொன்று இணைகின்றன. படத்தின் மிகப்பெரிய பலம் அதன் வித்தியாசமான கற்பனை உலகம். ஆரம்பத்தில் கதை சற்று மெதுவாக நகர்கிறது. பல கதாபாத்திரங்கள் அறிமுகமாகும்போது படம் எந்த திசையில் செல்கிறது என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு கதையின் வெவ்வேறு பகுதிகள் ஒன்றோடொன்று இணைக்கத் தொடங்குகின்றன.
குறிப்பாக பொம்மைகள், சூனியக்காரி மற்றும் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்திற்கு தனித்துவமான சுவையை கொடுக்கின்றன. படத்தின் ஹாரர் அம்சத்தைவிட நகைச்சுவை சில இடங்களில் சிறப்பாக வேலை செய்கிறது. குறிப்பாக டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர் மற்றும் ஆர்.ஜே. தீபக் ஆகியோரின் கூட்டணி பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறது. சினிமாவாலா சதீஷின் கதாபாத்திரமும் குறிப்பிடத்தக்க நகைச்சுவை அம்சமாக உள்ளது. அஞ்சலி நாயர் படத்தின் முக்கியமான பலமாக இருக்கிறார். நகைச்சுவைக் காட்சிகளிலும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். டிராவிட் செல்வம் கதாநாயகனாக இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார். சித்தி இத்னானி தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நடித்துள்ளார். தேவதர்ஷினி சூனியக்காரி கதாபாத்திரத்தில் தேவையான மர்மத்தையும் மிரட்டலையும் கொடுக்கிறார்.
ஆர்.ஜே. தீபக் நகைச்சுவைக்கு நல்ல பங்களிப்பு செய்கிறார். ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு கற்பனை உலகத்திற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. ஹரி எஸ்.ஆர். இசை மற்றும் பின்னணி இசை காட்சிகளின் மனநிலையை உருவாக்க உதவுகிறது. சதீஷ் சூர்யா.பெரிய அளவிலான உலகத்தை உருவாக்காமல், குறைந்த இடங்களையும் கதாபாத்திரங்களையும் வைத்து படத்தை நகர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் கருத்து வெளிப்புற அழகை மட்டுமே வைத்து ஒருவரை மதிப்பிடுவது, நிறம் மற்றும் தோற்றத்தை வைத்து மனிதர்களை ஒதுக்குவது போன்ற சமூகப் பார்வைகளையும் படம் பேசுகிறது. குறிப்பாக அஞ்சலி நாயரின் கதாபாத்திரம் மூலம் இந்த கருத்து அழுத்தமாக முன்வைக்கப்படுகிறது.
இதனால் வெறும் ஹாரர்-காமெடி படமாக மட்டும் இல்லாமல், ஒரு சமூகக் கருத்தையும் படம் சொல்ல முயற்சிக்கிறது. மேலும், பொம்மைகள் நிறைந்த கற்பனை உலகத்தை இன்னும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கலாம் என்ற குறையும் உள்ளது. ‘ட்ரோன்ஸ்’ வழக்கமான தமிழ் சினிமா கதையிலிருந்து விலகி, ஹாரர், ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவையை கலந்து புதிய முயற்சியை கொடுத்திருக்கிறது. முதல் பாதியில் சற்று பொறுமை தேவைப்பட்டாலும், பின்னர் கதை சுவாரஸ்யமாக மாறுகிறது. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய வகையில் பெரிய அளவிலான வன்முறை அல்லது வெளிப்படையான காட்சிகளைத் தவிர்த்து உருவாக்கப்பட்டிருப்பதும் படத்தின் பலம்.