அமரம் என்ற வார்த்தைக்கு படகு, தோணி, போர் என பல பொருள் உண்டு.
சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:
மலை அடிவாரப் பகுதியில் சிறு வயதில் தன் கண்முன்னே தாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூரத்தைக் கண்டு வேதனையில் உறைந்து போகும் அருகன் (ராஜன் தேஜஸ்வர்), மனதளவில் ஈரம் அற்றுப்போய், எந்தவித வாழ்க்கை லட்சியம் இன்றி பணத்துக்காக மட்டுமே உயிர்களை பறிக்கும் இரக்கமற்ற கூலிப்படை அசுரனாக உருவெடுக்கிறான். அவனது இந்த கொடூர பின்னணியை சுயலாபத்திற்காக பயன்படுத்தி சுரண்டும் ஊர் முதலாளிகளின் வழிகாட்டலில், ஒரு முக்கிய அரசியல்வாதியை கொல்வதற்கான ஒப்பந்தத்தை ஏற்று யோசிக்காமல் அதை நிறைவேற்றுகிறான்.
தந்தையை இரக்கமின்றி படுகொலை செய்த அருகனைப் பழிதீர்க்கும் அசைக்க முடியாத வெறியோடு, அவரது மகள் ஷர்மிளா பாரதி (ஐரா அகர்வால்) தந்தையின் நண்பர் மற்றும் அரசியல் செல்வாக்குமிக்க ஏகலைவனுடன் (நாகிநீடு) இணைந்து அருகன் வாழும் வறண்ட, ஆபத்தான மலை அடிவார வனப்பகுதியை தேடிப் புறப்படுகிறாள். ஆனால் அங்கு அவளுக்கு எதிர்பாராத பேரபாயங்களும் அதிர்ச்சிகளும் காத்திருக்க, கூடவே இருந்து துரோகம் இழைக்கும் ஏகலைவனின் நயவஞ்சகத்தால் ஷர்மிளாவின் உயிருக்கே ஆபத்து சூழ்கிறது.
இந்த இக்கட்டான கட்டத்தில், தன் தந்தையைக் கொன்ற அருகனே ஷர்மிளாவை காப்பாற்ற வேண்டிய முரண்பாடான சூழல் உருவாக, அம்புபோல் பாயும் வன்முறைக்கு மத்தியில் திருந்தி வாழ நினைக்கும் அருகனின் நேர்மையை ஷர்மிளா உணர்கிறாள். அதைத் தொடர்ந்து, உண்மையான எதிரிகளிடமிருந்து அவர்கள் இருவரும் எப்படித் தப்பிக்கிறார்கள், வன்முறைச் சூழலில் உருவாகும் திருப்புமுனைகள் உடன் அவர்களின் பயணம் எந்த இலக்கை நோக்கி முடிகிறது என்பது படத்தின் மீதிக்கதை….
ராஜன் தேஜஸ்வர் சிகை கூட்டி கெட்டப்பில் ஈர்க்கிறார். மிகையில்லா நடிப்பிற்கு நிச்சயமாக அவர் பயிற்சி பெறுவார் வரும்காலங்களில். ஐரா அகர்வால் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார். ஜார்ஜ் மரியன், சாய் தீனா உள்ளிட்ட கேரக்டர்களும் சிறப்பு செய்துள்ளனர்
மிக்கி ஜெ. மேயர் இசை சூப்பருமில்லை. சுமாருமில்லை. பரத்குமார் டீசண்டான ஒளிப்பதிவைத் தந்துள்ளார். கதையில் பேசப்பட்டுள்ள பொலிட்டிகல் மிக முக்கியமானது. மலைவாழ் மக்களை கூலிப்படையாக மாற்றும் அரசியல் வியாதிகளை விமர்சித்துள்ளார் இயக்குநர் திரு அருள் கிருஷ்ணா.
திரைக்கதையில் இன்னும் ஆழம் சேர்த்திருக்கலாம்….
மொத்தத்தில் இந்த ‘அமரம்’ அரசியல் எதிரி.
RATING 2.9/5