ஜார்க்கண்ட் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம்!

ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில், சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.

போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும் தண்ணீரை பீய்ச்சியடித்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினர். இருப்பினும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல், பல தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேறினர்.

போராட்டம் நடைபெறும் இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் தில்னவாஸ் பாஷா, போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும், பல போராட்டக்காரர்கள் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர் தலைவர் தேவேந்திரநாத் மஹதோவும் இந்த பேரணியில் இணைந்தார். முள்வேலிகள் மற்றும் தடுப்புகளைத் தாண்டி வந்ததாக அவர் கூறினார்.அரசுப் பணியாளர் தேர்வுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை எதிர்த்து ஜார்க்கண்ட் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 10-ஆம் தேதி சட்டப்பேரவையை முற்றுகையிடும் நோக்கில் பேரணி நடத்தப்படுகிறது. இதற்கிடையில், காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்கா, இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து, “நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்,” என்று கூறியுள்ளார். மாணவர்களின் கோரிக்கைகளில் சுமார் 98 சதவீதத்தை ஜார்க்கண்ட் அரசு ஏற்கனவே நிறைவேற்றியுள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால் மாணவர்கள் இந்தக் கூற்றை ஏற்க மறுக்கின்றனர். குறிப்பாக, ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையத்தின் ஜேபிஎஸ்சி மற்றும் ஜேஎஸ்எஸ்சி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பதோடு, அந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. ஊடகங்களிடம் பேசிய தேவேந்திரநாத் மஹதோ, “நான் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருக்கிறேன். இருந்தபோதிலும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வந்துள்ளேன். ஆம்புலன்ஸில் இங்கு வந்தேன்.” என்றார்.

மேலும், “தேர்வர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டிய கட்டாயம் உள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.காவல்துறை ஏன் தடியடி?

போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து ராஞ்சி நகர காவல் கண்காணிப்பாளர் பராஸ் ராணா விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் 90 சதவீதம் பேர் அமைதியாக உள்ளனர். ஆனால் 10 சதவீதம் பேர் யாருடைய பேச்சையும் கேட்கவில்லை,” என்றார்.

மேலும், “போராட்டக்காரர்கள் கடைசி நான்கு தடுப்புகளையும் உடைத்துக்கொண்டு முன்னேறினர். அவர்களை சமாதானப்படுத்த பலமுறை முயற்சி செய்தோம். ஆனால் மேலும் ஒரு தடுப்பையும் அவர்கள் உடைத்தனர். அப்போது மூன்று காவலர்கள் காயமடைந்தனர்,” என்று தெரிவித்தார்.

“இப்போதும் காவல்துறையினரை தள்ளும் சம்பவங்களும், சில இடங்களில் கற்கள் வீசப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இருந்தபோதிலும், நாங்கள் சுமார் 30 விநாடிகள் மட்டுமே பலத்தைப் பயன்படுத்தினோம். அதன் பின்னர் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டோம். அனைத்து மாணவர்களும் எங்கள் சகோதர, சகோதரிகள்தான். எனவே அமைதியைக் கடைப்பிடிக்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *