காவல்துறை அத்துமீறல்கள் கடுமையாக வெளிப்பட்டன- CPIM சண்முகம்

தமிழ்நாடு அரசு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களை தர வேண்டியதில்லை என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. ஜனநாயகத்திற்கும், வெளிப்படை தன்மைக்கும் எதிரானது. ஏற்கனவே பல்வேறு தகவல்களை தரவேண்டியதில்லை என்று பல அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது சட்ட ஒழுங்கும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.

மத்தியில் இடதுசாரிகளின் ஆதரவோடு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்த காலத்தில் இடதுசாரிகளின் தொடர் நிர்ப்பந்தத்தால் “தகவல் பெறும் உரிமைச் சட்டம்” கொண்டுவரப்பட்டது என்பது வரலாறு.

தமிழ்நாட்டின் பொது (சட்டம் – ஒழுங்கு) துறை இந்த சட்டத்தில் இருந்து விதி விலக்கு பெறுவது காவல் நிலைய உயிரிழப்புகள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் மக்களின் கவனத்திற்கு வருவதை தடுக்கும்; இது மனித உரிமைகளுக்கு பேரபாயத்தை உருவாக்குவது ஆகும். மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள் உள்ளிட்ட தகவல்களும் இதில் அடங்குமெனில், அது அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள போராட்ட உரிமைகளை நசுக்க முயற்சிப்பது ஆகும். தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழான தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொருந்துமென்பது ஏற்கெனவே எதேச்சாதிகார ஆயுதமாக பயன்படும் அச்சட்டத்தை மேலும் கூர்தீட்டவே செய்யும். மத, சாதி மோதல்கள் குறித்த தகவல்களுக்கு விலக்கு அளிக்கப்படுவது பிற்போக்கான சக்திகளால் பயன்படுத்தப்படக் கூடும். எதை வேண்டுமானாலும் சட்டம் – ஒழுங்கு என்ற வரையறுக்குள் கொண்டு வந்து தகவல்களை மறுக்க முடியும். இது எதேச்சதிகாரமானதும், சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானதாகும்.

அண்மைக் காலங்களில்  மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்களில் காவல்துறை அத்துமீறல்கள் மிகக் கடுமையாக வெளிப்பட்டன. கல்லூரி மற்றும் பள்ளி வளாகங்களுக்குள் காவல்துறை நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டது. “கண்காணிப்பு அரசாக” பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்படுகிற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் போராட்ட உரிமைகள் ஒடுக்கப்படுவதன் நீட்சியாகவே இந்த அரசாணையும் அமைந்திருக்கிறது. 

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையே அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே ஆகும்.  சாமானிய மக்களின் கைகளில் ஆயுதமாக திகழக் கூடிய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் முனையை மழுங்கச் செய்யும் இத்தகைய அரசாணை உடனடியாக  திரும்பப் பெறப்பட வேண்டும். இது எதேச்சதிகார, பிற்போக்கு, ஜனநாயக விரோத, மனித உரிமை மறுப்பு போக்குகளுக்கே வழி வகுக்கும் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் தமிழ்நாடு மாநில செயற்குழு அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *