‘ஐம் கேம்’ விமர்சனம்

இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு துல்கர் சல்மான் மலையாள சினிமாவுக்குத் திரும்பியுள்ள திரைப்படம் தான் ‘ஐம் கேம்’.

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்து தந்தையின் விருப்பப்படி நிறுவனத்தை நடத்தி வந்தாலும், சூதாட்டத்துக்கு அடிமையாகி, கடனில் மூழ்கிக் கிடக்கும் டேன் (துல்கர் சல்மான்). மறுபுறம், கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவரான விக்கி (ஆண்டனி வர்கீஸ்). எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு விபத்துக்கு பிறகு ஏற்படும் ஒரு விசித்திரமான நிகழ்வால் இந்த இருவரின் வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று தற்செயலாகப் பின்னப்படுகிறது. இந்தச் சூழல் அவர்களின் வாழ்க்கையில் பல குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது. அதிலிருந்து இருவரும் எப்படி மீண்டனர்? என்பதே கதை….

நடிப்பைப் பொறுத்தவரை, துல்கர் சல்மான் தனது வழக்கமான துள்ளலான மேனரிசங்கள் மற்றும் ஸ்டைலான தோற்றத்தின் மூலம் முதல் பாதியைத் தன் தோள்களில் தாங்குகிறார். ஆடம்பர வாலிபனாக அவரது திமிரான பேச்சும், ஆக்‌ஷன் காட்சிகளில் காட்டும் சுறுசுறுப்பும் ரசிக்க வைக்கின்றன. ஆண்டனி வர்கீஸ் பெப்பே தனக்குக் கொடுக்கப்பட்ட எமோஷனல் பாத்திரத்தில் வழக்கம் போல தனது ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி, அந்த நீண்ட ஃப்ளாஷ்பேக்கிற்கு ஓரளவு நியாயம் சேர்க்கிறார். https://tamillive.news/i-am-game-movie-review-tamil-live-news-cinema/

ஆனால், படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் மிக மோசமாக எழுதப்பட்டுள்ளன. கதாநாயகியாக வரும் கயாது லோஹர், கதைக்கு எந்தவிதத்திலும் பயன்படாத ஒரு டம்மி கதாபாத்திரமாக வந்து போகிறார்; அவரது நடிப்பும், உதட்டசைவும் காட்சிகளோடு ஒட்டாமல் செயற்கையாகத் தெரிகிறது. வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின், மிரட்டலான வில்லத்தனத்தைக் காட்டாமல், தேவையற்ற ரைமிங் வசனங்களைப் பேசி கார்ட்டூன் வில்லன் போலத் தோன்றுவது படத்திற்குப் பெரும் பின்னடைவு. வினய் ஃபோர்ட், கதிர் போன்ற திறமையான நடிகர்கள் வீணடிக்கப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவு படத்திற்கு உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்டத்தைக் கொடுக்கிறது. இரவு நேர காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வண்ணங்களும், நவீன கேமரா கோணங்களும் கண்ணுக்கு விருந்து. ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை, விறுவிறுப்பு குறையும் காட்சிகளைத் தனது அதிரடி இசையால் நிமிர்த்த முயல்கிறது. எனினும், படத்தொகுப்பாளர் சம்மன் சாக்கோ இரண்டாம் பாதியில் கத்தரிக்கோலைத் தாராளமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்குத் தள்ளாடும் ஓட்டத்தை ஒரு அரை மணி நேரம் குறைத்திருந்தால் இந்தத் திரைப்படம் இவ்வளவு சோர்வைத் தந்திருக்காது.

மொத்தத்தில் இந்த ‘ஐம் கேம்’ சோர்வான விளையாட்டு. https://tamillive.news/i-am-game-movie-review-tamil-live-news-cinema/

RATING 2.1/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *